Monday, May 2, 2011

முஸ்லிம்களை இழிவு சூழ்ந்து கொள்வது எதனால்?


“வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அன்றி நடைமுறைப்படுத்துவதில் புறம் காட்டி பின் வாங்கி தனது பின்னங்கால் புட்டத்தில் அடிபட ஓடவே செய்கிறார்கள்.
மேற்கண்ட தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸ் நூல்களிலும் விரவியே கிடக்கிறது. எனினும் மக்கள் இதன்படி செயல்படாமல் வேறு எந்த அடிப்படைகளில் “”நாங்கள் முஸ்லிம்கள்” என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றால்
1. பிறப்பால், 2. முன்னோர்களின் கலாச்சார வழிமுறைகளால், 3. பெரும்பாலான வழிகேடர்களைப் பின்பற்றுவதால், 4. பெரியோர்கள், குருமார்களை முன்னிருத்திக் கொள்வதால் மேற் கண்ட நான்கு வழிகளில் அவர்கள் சீர்கெட்டு வழிதவறி பித்அத், குஃப்ர், ஷிர்க் என்ற பெரும் பாவங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டு ஷைத்தானிய பாதையில் சென்று இழிநிலையை அடைகிறார்கள்.
1. பிறப்பால் உயர்வா?
குறைஷ் கோத்திரத்தில் பிறந்துவிட்டதால் அபூஜஹீல் உயர்ந்தவனா? ஹபசி குலத்தில் பிறந்த பிலால்(ரழி) உயர்ந்தவர்களா? என்ற சாதாரண அறிவுகூட இல்லாத இந்த மடையர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று எவ்வாறுதான் கூறுகிறார்கள்? அரபி அஜமியைவிடவோ, அஜமி அரபியை விடவோ மேலானவன் இல்லை. யார் பயபக்தியாளர்களோ அவர்களே அல்லாஹ்வுக்கு முன் மேலானவர்கள் என்ற நபிமொழியை இவர்கள் அறியவில்லையா?

2. முன்னோர்களின் கலாச்சாரம்: நபியின் வழி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு “”ஆ எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து வந்த நடை முறை” என்று தூக்கிப் பிடிப்பவர்களுக்கு (குர்ஆனில்) “”அல்லாஹ்வின் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “இல்லை எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்ளுக்கும் போதும் என்கின்றனர். என்ன? அவர்கள் முன்னோர்கள் மூடர்களாயும் எதையும் விளங்காதவர்களாயும் இருந்தாலுமா?” (பார்க்க. 2:170,171)
என இறைவன் கேட்பது இவர்கள் காதுகளில் விழவில்லை.

3. பெரும்பாலானோரைப் பின்பற்றுதல்:
ஷைத்தான் மிகவும் சாமர்த்தியசாலி, அவன் இப்பூமியில் பெரும்பாலானோரை அவரவர் களின் வழியிலேயே சென்று அவர்களை தன் வலையில் வீழ்த்தும் மாயக்காரன். உமர்(ரழி) போன்ற விரல் விட்டு என்னும் ஒரு சிலரே அவனது வலையில் தப்பிப் பிழைப்பர். அப்படியிருக்க இப்பூமியில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். ஆகவே அதை சரி காண்கிறேன் என்போருக்கு

“இப்பூமியில் நீங்கள் பெரும்பாலானவர்களைப் பின்பற்றி னால் அவர்கள் உங்களை வழிகெடுத்து விடு வார்கள்”(6:116) என்ற குர்ஆனின் வசனங்கள் எங்கே கண்ணில் படப்போகிறது?
4. பெரியோர்கள் குருமார்கள்:
வலிமார்கள் ஒளிமார்கள் என்று அவ்லியாக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலரும், ஞானமார்க்கம் தரீக்காவின் பாதை எனச் சொல்லிக் கொண்டு சிலரும், மத்ஹப் தப்லீக் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இயக்கம் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இந்த சிலரெல்லாம் யாரென்றால் “”நாங்கள் அரபி கற்ற ஆலிம்கள் நீங்களெல்லாம் அவாம்கள்” என்று ஆணவம், அகம்பாவம் பேசும் பட்டம் பெற்ற மெளலவிப் புரோகிதர்களே பெரும்பாலானோரை வழி கெடுத்ததனால் இவர்கள் மறுமையில் 33:66-68ன்படி புலம்பி நாங்கள் பலஹீனர்களாய் இருந்தோம். இவர்கள் எங்களை வழிகெடுத்ததினால் இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடு என கதறும் இழிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

நெறிநூலில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலகில் இழிவைத் தவிர வேறு கூலி கிடையாது என்றும், மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள் என்றும் 2:85ல் இறைவன் கூறுகின்றான். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டி அதன்மீது நிலைக்கச் செய்வானாக!

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates