குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒரு தடவை தான் கொலை செய்திருப்பதால் தன்னை அவ்வளவு கெட்டவனாகக் கருதுவதில்லை.
கொலை செய்வதையே தன் பிழைப்பாகக் கொண்டவனோ தன்னை மனநோயாளியோடு ஒப்பிட்டு அவனை விடத் தான் தூய்மையானவன் என வாதிடுகின்றான். குற்றவாளிகள் எனக் கருதப்படா விட்டாலும் கூடாவொழுக்கமுடையவர்களைப் பொருத்த வரையிலும் இதுவே தான் உண்மை. வீண் அரட்டை அடிப்பதில் நேரத்தைக் கழிப்பவன் தன் செய்கையை மிக அற்பமானதாகவே கருதுகிறான்.
தனக்கு கெட்ட எண்ணம் எதுவும் கிடையாது என்று அதற்குக் காரணமும் கற்பிப்பான். வேறொருவனுக்கு தீங்கு செய்ய நினைப்பவன், தான் நல்லவனாக இருப்பதாலேயே தீங்கு செய்ய நினைப்பதாகவும் கூறுகிறான். இத்தகைய வாதங்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டவர்கள் யாவருமே தங்களைக் குற்றமற்றவர்கள் என்று கூறுவார்களே இல்லாமல் தாங்கள் செய்த குற்றங்கள் விளைவித்த தீமையை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
ஆனாலும் இவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் ஏற்கத்தக்கவை அன்று இவர்கள் எலலோருமே பெரும் குற்றவாளிகள் தாம். ஏனெனில், குர்ஆனை முழுமையாகப் பற்றிப் பிடித்து ஒழுகுபவனே குற்றமற்றவனாகத் திகழ முடியும். நேர்மாறாக, அவன் என்னதான் காரணம் கற்பித்தாலும் குற்றவாளியே ஆவான்.
மனித ஆன்மாவுக்கு இரண்டு நிலைகள் உள்ளன என்பதை நாம் யாவரும் அறிவோம்; மனச்சாட்சியும் கீழான ஆன்மாவும் (தான் எனும் முனைப்பு). மனச் சாட்சி எப்பொழுதும் மனிதனை நல்லதையும் சரியானதையுமே செய்யத் தூண்டும். கீழான ஆன்மா (நஃப்ஸ்) -தான் எனும் ஆணவம் – எல்லாவிதமான தீயச் செயல்களை செய்யத் தூண்டும்; இதனை இறைவன் அங்கீகரிப்பதில்லை. ஆனாலும் உறுதியான இறை நம்பிக்கையும் இறை பயமும் இருந்தால் மாத்திரமே மனிதன் தன் மனச்சாட்சியை முழுமையாக நம்பி செயல்பட முடியும்.
மார்க்கம், மனிதன் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் மனச்சாட்சியைப் பெற உதவுகிறது. இறைவனால் வெளிப்பாடு மூலம் வழங்கப்பட்டதன் மீது முழு நம்பிக்கை கொண்டு அதற்கு முற்றிலுமாக அடிபணிந்து நடந்தால் தான் மனிதன் நல்ல சிந்திக்கக் கூடிய ஆற்றலையும் நல்ல முடிவெடுக்கும் திறனையும் பெற முடியும். எடுத்துக்காட்டாக, இறைவனை அஞசும் மனிதன் குர்ஆன் கூறுவது போல நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் அளவுகோல் வழங்கப்படுகிறான் ( 8:29)
இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்குப் பயந்தால் அவன் உங்களுக்கு (நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும்) அளவுகோலைத் தருவான். உங்கள் பாவங்களை உங்களை விட்டும் நீக்கி உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வின் அருள் மிக மேன்மையானது. (8:29)
நல்லதையும் கெட்டதையும், உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கக் கூடியச் சிறந்த ஆதாரம் குர்ஆன் தான்.
(நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் (நெறி நூலாகிய) ஃபுர்கானைத் தன் அடியாருக்கு, அன்னார் உலகத்தார் அனைவரையும் எச்சரிக்கை செய்யும் பொருட்டு இறக்கியருளினான். (25:1)
குர்அன் நல்லவை மற்றும் தீயவை பற்றி விரிவாக விளக்கி நம்முடைய மனச்சாட்சியையும் உணர்வையும் பயன்படுத்தும் விதத்தையும் கூறுகிறது. எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒரு வசனத்தில் நேர்மையானவை பற்றிய கருத்தை விரிவாகத் தருகிறது;
மேற்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்புவது நேர்மையான செய்கையாக ஆகி விடாது.
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் வானவர்களையும் வேதங்களையும் இறைத்தூதர்களையும் மெய்யென நம்பி, தன் பொருளை அதனை அவர்கள் எவ்வளவு தான் விரும்பினாலும் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்க்கு வழங்குபவருக்கும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவோரும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவரும், ஏழ்மையிலும், துன்பத்திலும் கடுமையான போர் நிகழும் நேரத்திலும் பொறுமையைக் கைக் கொள்வோரும் தாம் நேர்மையாளர்கள்; மேலும் இவர்கள் தாம் உணமையாளர்களும், இறையுணர்வுடையவர்களும் ஆவர். (2:177)
குடும்பத்தினரிடமிருந்தும் மூதாதையரிடமிருந்தும் அல்லது சமுதாயப் பழக்க வழக்கங்களிலிருந்தும் ஏற்றுக் கொண்ட நம்பிக்கை எதுவானாலும் அது குர்ஆனின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாயின் அஃது எவ்வகையிலும் நம்பத்தக்கதல்ல. சாதாரணமாக, ஒரு நல்ல மனிதனைப் பற்றி, விவரிக்க சமுதாயத்தில் புழங்கி வரும் சொற்றொடர் ஒன்றை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். “ஒரு ஈயைக் கூடக் கொல்ல மாட்டான்” என்பது இத்தகையச் சொற்றொடர்களில் ஒன்று.
ஆனாலும் ஒரு மனிதன் ஈயைக் கொல்வதைத் தவிர்க்கும் போது அவன் குர்ஆனின் ஏவல்களுக்குப் பணியத் தவறிவிட்டால் அவனை நல்லவன் என்று கூறுவது முறையாகாது. குர்ஆன், தீயவை என்று வகைப்படுத்தியவற்றைத் தவிர்ப்பதும் நல்லவை என்று குறிப்பிட்டவற்றை செயல்படுத்துவதும் தாம் உண்மையில் நம்மீது கடமை ஆகும். ஏழைகளுக்கு இரங்கி அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி அளிப்பவரைச் சிலர் மார்க்கச் சிந்தை உடையவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர். ஆனால், அந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒருவனை உண்மையான இறை நம்பிக்கையாளன் என்று வகைப்படுத்த அருகதையுடையவனாக்குபவை அல்ல என்று குர்ஆன் அறிவிக்கிறது. குர்ஆனின் கட்டளைகளை அக்கறையுடன் நிறைவேற்றி வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறப் பாடுபடுகிறவன் தான் உண்மையான இறைநம்பிக்கையாளன் ஆவான்.
0 comments:
Post a Comment