Thursday, May 5, 2011

அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்!

Post image for அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்!
யூதர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தாரும் கொண்டாடும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை).
அரபு நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். ஆரம்ப கால யூத, கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை. ஆனால் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம் வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர். இந்த விபரங்களை ஏன் எடுத்து எழுதுகிறோம் என்றால் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மக்களை நேர்வழிப் படுத்தும் ஒரு நபியும் அரபுகளிடையே தோன்றவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும் மூட நம்பிக்கையிலும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள் என்பதை உணர்த்தத்தான்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும்போது அந்த அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்ட முடியாது. அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருந்ததாகத் தெரியவில்லை. 365 சிலைகளை ஏக இறைவனின் வீடான கஃபத்துல்லாஹ்வின் உள்ளே வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்றவற்றில் கொடிகட்டிப் பறந்தார்கள். பஞ்சமா பாதகங்கள் அனைத்தும் அவர்களிடம் வீர, தீரச் செயல்களாகப் பெருமை பேசப்பட்டு வந்தன.

பல்லாண்டு ஊற வைத்த மதுக்குடங்கள் இருப்பது கொண்டு பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

இப்படி பங்கு போடுவதிலும், வேறு பல சில்லரைக் காரியங்களிலும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டால், அதற்காகத் தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். அன்றைய அரபு நாட்டில் பல்வேறு பிரிவினர்களாக, குழுக்களாகப் பிரிந்து நின்று பெறுமை பேசுவதோடு, மற்றப் பிரிவினரை இழிவாக, கேவலமாக எண்ணி ஏகத்தாளம் பேசுவதோடு, அதனால் போட்டி பொறாமை ஏற்பட்டு காலமெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி மனித உள்ளம் படைத்தவர்கள் செய்யக் கூடாத அத்தனைக் காரியங்களையும், சுருக்கமாகச் சொன்னால் மிருகங்களாக வாழ்ந்து வந்தார்கள்.

மனித வர்க்கத்தின் இழிவான, மோசமான ஒரு நிலையே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வீழ்ந்து கிடந்தனர். இறுதி நபி அந்த அரபு மக்களிடையே வரும்போது அந்த மக்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், நரக நெருப்பின் விழிம்பில் இருந்ததாகவும் அல்லாஹ் அல்குர்ஆன் 3:103 வசனத்தில் தெளிவுபடுத்திவிட்டான். அப்படியானால் அதைவிட இழிவான, மோசமான கீழ்த்தரமான வேறு நிலையே மனித வர்க்கத்தில் இல்லை என்பதுதான் அதன் பொருள். அரபு மக்களிடையே இருந்த பிரிவுகள் போல் உலகில் வேறு எங்கும் இருக்கவில்லை.
அப்படிப்பட்ட அந்த மக்கள் தங்களின் அந்த நிலைக்கு நேர் மாற்றமாக ஒன்றுபட்டு, மனிதனின் ஆக உன்னத நிலை, மனிதப்புனிதன் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஆக உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அகில உலக மக்களுக்குக் முன்மாதிரியாக, வழிகாட்டிகளாக ஆனார்கள். எப்படி? அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள் இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள் எப்படி? அதி அற்புதமான இந்த அதிசயத்தை எது நிகழ்த்திக் காட்டியது?

ஆம்! அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனே இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியது. ஆயினும் இந்த அற்புத மாற்றம் மிக எளிதாக நிறைவேறிவிடவில்லை. மிகமிக கடின முயற்சிக்குக் பின்னரே இது சாத்தியமாயிற்று. வழமைப்போல் அந்த காலத்திலும் புரோகிதரர்களே மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். “தாருந்நத்வா”(அறிஞர்கள் சபை) என்ற புரோகிதரர்களின் சபையினரே மக்களை ஆட்டிப்படைத்து வந்தனர். அந்த மக்கள் எளிதாக அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனை ஏற்றுச் செயல்பட அந்த தாருந்நத்வா அறிஞர்கள் விட்டு வைக்கவில்லை. அல்குர்ஆனை விட்டு மக்களைத் தூரப்படுத்த என்ன என்ன தந்திரங்களைப் கையாள முடியுமோ அத்தனைக் தந்திரங்களையும் கையாண்டார்கள்.

இந்த முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம் ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள். அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா புரோகிதரர்கள் செய்தனர்.

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்டுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு எத்தனை விதமான தொல்லைகள், துன்பங்கள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தார்கள். சிலரைக் கோரமாகக் கொலை செய்தார்கள். எப்படியும் நேர்வழிக்கு வந்தவர்களை மீண்டும் தங்களது வழிகேட்டுப் பாதைக்கு கொண்டு வந்து சேர்க்க பெரும்பாடு பட்டார்கள். சிலரைக் கொலை செய்தல், கடும் வெயிலில் வெற்று மேனியினராகப் போட்டு வதைத்தல், சாட்டையால் அடித்துக் கொடுமைப்படுத்தல் நபி صلى الله عليه وسلم அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ஒரு பள்ளத்தாக்கில் ஊர் ஒதுக்கி வைத்தல், இப்படி அந்தப் புரோகிதரர்களால் முடிந்த அத்தனைத் துன்பங்களையும் கொடுத்து சித்திரவதை செய்தனர். சில முஸ்லிம்களும் இந்தத் துன்பங்களால் ஓய்ந்துபோய் அல்குர்ஆனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று பின்வாங்கி இருப்பார்களானால் இன்று நாமெல்லாம் முஸ்லிமாக இருக்க முடியுமா? அல்குர்ஆன் வசனம் 5:67 என்ன கூறுகிறது?

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நிறவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த இறைக்கட்டளையில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை அப்படியே மக்களிடம் எடுத்து வைத்துவிட வேண்டும். அதனால் மக்கள் துன்பம் இழைக்க முற்பட்டால் அல்லாஹ் உம்மை காப்பாற்றப் போதுமானவன். எனவே நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இறைக்கட்டளைகளை உணர்ந்து சத்திய பிரச்சாரத்தில் சிறிதும் கூடுதல், குறைவு செய்யாமல் நிறைவாகவே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் துன்பங்களின் எல்லைக்கே போய் இறைவனிடம் முறையிடும் அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.. சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இத்தனை சோதனைகளுக்கும் உட்பட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் அயராது, சளிக்காது அல்குர்ஆனை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அல்குர்ஆன் நடைமுறை சாத்தியமில்லை என்று சொந்த யூகங்ளைப் புகுத்த முற்படவில்லை. அதன் இறுதி முடிவு பல பிரிவினர்களாகப் பிரிந்து வீழ்ச்சியின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள், ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாகி அகில உலகிற்கும் வழிகாட்டிகளாக, முனோடிகளாக இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள்.
 

Monday, May 2, 2011

நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?




Post image for நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒரு தடவை தான் கொலை செய்திருப்பதால் தன்னை அவ்வளவு கெட்டவனாகக் கருதுவதில்லை.
கொலை செய்வதையே தன் பிழைப்பாகக் கொண்டவனோ தன்னை மனநோயாளியோடு ஒப்பிட்டு அவனை விடத் தான் தூய்மையானவன் என வாதிடுகின்றான். குற்றவாளிகள் எனக் கருதப்படா விட்டாலும் கூடாவொழுக்கமுடையவர்களைப் பொருத்த வரையிலும் இதுவே தான் உண்மை. வீண் அரட்டை அடிப்பதில் நேரத்தைக் கழிப்பவன் தன் செய்கையை மிக அற்பமானதாகவே கருதுகிறான்.
தனக்கு கெட்ட எண்ணம் எதுவும் கிடையாது என்று அதற்குக் காரணமும் கற்பிப்பான். வேறொருவனுக்கு தீங்கு செய்ய நினைப்பவன், தான் நல்லவனாக இருப்பதாலேயே தீங்கு செய்ய நினைப்பதாகவும் கூறுகிறான். இத்தகைய வாதங்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டவர்கள் யாவருமே தங்களைக் குற்றமற்றவர்கள் என்று கூறுவார்களே இல்லாமல் தாங்கள் செய்த குற்றங்கள் விளைவித்த தீமையை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
ஆனாலும் இவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் ஏற்கத்தக்கவை அன்று இவர்கள் எலலோருமே பெரும் குற்றவாளிகள் தாம். ஏனெனில், குர்ஆனை முழுமையாகப் பற்றிப் பிடித்து ஒழுகுபவனே குற்றமற்றவனாகத் திகழ முடியும். நேர்மாறாக, அவன் என்னதான் காரணம் கற்பித்தாலும் குற்றவாளியே ஆவான்.
மனித ஆன்மாவுக்கு இரண்டு நிலைகள் உள்ளன என்பதை நாம் யாவரும் அறிவோம்; மனச்சாட்சியும் கீழான ஆன்மாவும் (தான் எனும் முனைப்பு). மனச் சாட்சி எப்பொழுதும் மனிதனை நல்லதையும் சரியானதையுமே செய்யத் தூண்டும். கீழான ஆன்மா (நஃப்ஸ்) -தான் எனும் ஆணவம் – எல்லாவிதமான தீயச் செயல்களை செய்யத் தூண்டும்; இதனை இறைவன் அங்கீகரிப்பதில்லை. ஆனாலும் உறுதியான இறை நம்பிக்கையும் இறை பயமும் இருந்தால் மாத்திரமே மனிதன் தன் மனச்சாட்சியை முழுமையாக நம்பி செயல்பட முடியும்.
மார்க்கம், மனிதன் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் மனச்சாட்சியைப் பெற உதவுகிறது. இறைவனால் வெளிப்பாடு மூலம் வழங்கப்பட்டதன் மீது முழு நம்பிக்கை கொண்டு அதற்கு முற்றிலுமாக அடிபணிந்து நடந்தால் தான் மனிதன் நல்ல சிந்திக்கக் கூடிய ஆற்றலையும் நல்ல முடிவெடுக்கும் திறனையும் பெற முடியும். எடுத்துக்காட்டாக, இறைவனை அஞசும் மனிதன் குர்ஆன் கூறுவது போல நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும் அளவுகோல் வழங்கப்படுகிறான் ( 8:29)
இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்குப் பயந்தால் அவன் உங்களுக்கு (நல்லதையும் கெட்டதையும் பிரித்தறியும்) அளவுகோலைத் தருவான். உங்கள் பாவங்களை உங்களை விட்டும் நீக்கி உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வின் அருள் மிக மேன்மையானது. (8:29)
நல்லதையும் கெட்டதையும், உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கக் கூடியச் சிறந்த ஆதாரம் குர்ஆன் தான்.
(நன்மை தீமைகளைப் பிரித்தறிவிக்கும் (நெறி நூலாகிய) ஃபுர்கானைத் தன் அடியாருக்கு, அன்னார் உலகத்தார் அனைவரையும் எச்சரிக்கை செய்யும் பொருட்டு இறக்கியருளினான். (25:1)
குர்அன் நல்லவை மற்றும் தீயவை பற்றி விரிவாக விளக்கி நம்முடைய மனச்சாட்சியையும் உணர்வையும் பயன்படுத்தும் விதத்தையும் கூறுகிறது. எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒரு வசனத்தில் நேர்மையானவை பற்றிய கருத்தை விரிவாகத் தருகிறது;
மேற்கு நோக்கியோ, கிழக்கு நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்புவது நேர்மையான செய்கையாக ஆகி விடாது.
அல்லாஹ்வையும், இறுதிநாளையும் வானவர்களையும் வேதங்களையும் இறைத்தூதர்களையும் மெய்யென நம்பி, தன் பொருளை அதனை அவர்கள் எவ்வளவு தான் விரும்பினாலும் உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்க்கு வழங்குபவருக்கும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவோரும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவரும், ஏழ்மையிலும், துன்பத்திலும் கடுமையான போர் நிகழும் நேரத்திலும் பொறுமையைக் கைக் கொள்வோரும் தாம் நேர்மையாளர்கள்; மேலும் இவர்கள் தாம் உணமையாளர்களும், இறையுணர்வுடையவர்களும் ஆவர். (2:177)
குடும்பத்தினரிடமிருந்தும் மூதாதையரிடமிருந்தும் அல்லது சமுதாயப் பழக்க வழக்கங்களிலிருந்தும் ஏற்றுக் கொண்ட நம்பிக்கை எதுவானாலும் அது குர்ஆனின் கொள்கைகளுக்கு ஒவ்வாததாயின் அஃது எவ்வகையிலும் நம்பத்தக்கதல்ல. சாதாரணமாக, ஒரு நல்ல மனிதனைப் பற்றி, விவரிக்க சமுதாயத்தில் புழங்கி வரும் சொற்றொடர் ஒன்றை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். “ஒரு ஈயைக் கூடக் கொல்ல மாட்டான்” என்பது இத்தகையச் சொற்றொடர்களில் ஒன்று.
ஆனாலும் ஒரு மனிதன் ஈயைக் கொல்வதைத் தவிர்க்கும் போது அவன் குர்ஆனின் ஏவல்களுக்குப் பணியத் தவறிவிட்டால் அவனை நல்லவன் என்று கூறுவது முறையாகாது. குர்ஆன், தீயவை என்று வகைப்படுத்தியவற்றைத் தவிர்ப்பதும் நல்லவை என்று குறிப்பிட்டவற்றை செயல்படுத்துவதும் தாம் உண்மையில் நம்மீது கடமை ஆகும். ஏழைகளுக்கு இரங்கி அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி அளிப்பவரைச் சிலர் மார்க்கச் சிந்தை உடையவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர். ஆனால், அந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒருவனை உண்மையான இறை நம்பிக்கையாளன் என்று வகைப்படுத்த அருகதையுடையவனாக்குபவை அல்ல என்று குர்ஆன் அறிவிக்கிறது. குர்ஆனின் கட்டளைகளை அக்கறையுடன் நிறைவேற்றி வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறப் பாடுபடுகிறவன் தான் உண்மையான இறைநம்பிக்கையாளன் ஆவான்.

முஸ்லிம்களை இழிவு சூழ்ந்து கொள்வது எதனால்?


“வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அன்றி நடைமுறைப்படுத்துவதில் புறம் காட்டி பின் வாங்கி தனது பின்னங்கால் புட்டத்தில் அடிபட ஓடவே செய்கிறார்கள்.
மேற்கண்ட தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸ் நூல்களிலும் விரவியே கிடக்கிறது. எனினும் மக்கள் இதன்படி செயல்படாமல் வேறு எந்த அடிப்படைகளில் “”நாங்கள் முஸ்லிம்கள்” என்று மார்தட்டிக் கொள்கிறார்கள் என்றால்
1. பிறப்பால், 2. முன்னோர்களின் கலாச்சார வழிமுறைகளால், 3. பெரும்பாலான வழிகேடர்களைப் பின்பற்றுவதால், 4. பெரியோர்கள், குருமார்களை முன்னிருத்திக் கொள்வதால் மேற் கண்ட நான்கு வழிகளில் அவர்கள் சீர்கெட்டு வழிதவறி பித்அத், குஃப்ர், ஷிர்க் என்ற பெரும் பாவங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டு ஷைத்தானிய பாதையில் சென்று இழிநிலையை அடைகிறார்கள்.
1. பிறப்பால் உயர்வா?
குறைஷ் கோத்திரத்தில் பிறந்துவிட்டதால் அபூஜஹீல் உயர்ந்தவனா? ஹபசி குலத்தில் பிறந்த பிலால்(ரழி) உயர்ந்தவர்களா? என்ற சாதாரண அறிவுகூட இல்லாத இந்த மடையர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று எவ்வாறுதான் கூறுகிறார்கள்? அரபி அஜமியைவிடவோ, அஜமி அரபியை விடவோ மேலானவன் இல்லை. யார் பயபக்தியாளர்களோ அவர்களே அல்லாஹ்வுக்கு முன் மேலானவர்கள் என்ற நபிமொழியை இவர்கள் அறியவில்லையா?

2. முன்னோர்களின் கலாச்சாரம்: நபியின் வழி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு “”ஆ எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து வந்த நடை முறை” என்று தூக்கிப் பிடிப்பவர்களுக்கு (குர்ஆனில்) “”அல்லாஹ்வின் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “இல்லை எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்ளுக்கும் போதும் என்கின்றனர். என்ன? அவர்கள் முன்னோர்கள் மூடர்களாயும் எதையும் விளங்காதவர்களாயும் இருந்தாலுமா?” (பார்க்க. 2:170,171)
என இறைவன் கேட்பது இவர்கள் காதுகளில் விழவில்லை.

3. பெரும்பாலானோரைப் பின்பற்றுதல்:
ஷைத்தான் மிகவும் சாமர்த்தியசாலி, அவன் இப்பூமியில் பெரும்பாலானோரை அவரவர் களின் வழியிலேயே சென்று அவர்களை தன் வலையில் வீழ்த்தும் மாயக்காரன். உமர்(ரழி) போன்ற விரல் விட்டு என்னும் ஒரு சிலரே அவனது வலையில் தப்பிப் பிழைப்பர். அப்படியிருக்க இப்பூமியில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். ஆகவே அதை சரி காண்கிறேன் என்போருக்கு

“இப்பூமியில் நீங்கள் பெரும்பாலானவர்களைப் பின்பற்றி னால் அவர்கள் உங்களை வழிகெடுத்து விடு வார்கள்”(6:116) என்ற குர்ஆனின் வசனங்கள் எங்கே கண்ணில் படப்போகிறது?
4. பெரியோர்கள் குருமார்கள்:
வலிமார்கள் ஒளிமார்கள் என்று அவ்லியாக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலரும், ஞானமார்க்கம் தரீக்காவின் பாதை எனச் சொல்லிக் கொண்டு சிலரும், மத்ஹப் தப்லீக் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இயக்கம் எனச் சொல்லிக் கொண்டு சிலரும், இந்த சிலரெல்லாம் யாரென்றால் “”நாங்கள் அரபி கற்ற ஆலிம்கள் நீங்களெல்லாம் அவாம்கள்” என்று ஆணவம், அகம்பாவம் பேசும் பட்டம் பெற்ற மெளலவிப் புரோகிதர்களே பெரும்பாலானோரை வழி கெடுத்ததனால் இவர்கள் மறுமையில் 33:66-68ன்படி புலம்பி நாங்கள் பலஹீனர்களாய் இருந்தோம். இவர்கள் எங்களை வழிகெடுத்ததினால் இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடு என கதறும் இழிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

நெறிநூலில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலகில் இழிவைத் தவிர வேறு கூலி கிடையாது என்றும், மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பால் மீட்டப்படுவார்கள் என்றும் 2:85ல் இறைவன் கூறுகின்றான். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டி அதன்மீது நிலைக்கச் செய்வானாக!

அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்

Post image for அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்




அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்
இந்தக்கடமையே கடமையே மகத்தானதும் கட்டாயமானதுமாகும். ஏனெனில் அது மகத்தான படைப்பாளனான, அனைத்து விஷயங்களையும் நிர்வகிக்கும் அரசனாகிய அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளாகும். அவனே இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து தனது எல்லையில்லா ஞானத்தின் மூலம்  நிர்ணயம் செய்து வருபவன்.
இன்னபொருள் என்று கூறுவதற்கு இயலாத நிலையிலிருந்து இல்லாமையிலிருந்து படைத்தவன் அவனே. தாயின் வயிற்றில் மூன்று இருள் உரைகளுக்குள்ளே இருந்தபோது அல்லாஹ்வே தனது அருளினால் வளர்த்துப் பரிபாலித்தான். அந்த நிலையில் அவனைத்தவிர எந்த சக்தியும் உனக்கு உதவி செய்ய இயலாத நிலையிலிக்க, உணவளித்து உனது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவைப்படும் அனைத்தையும் அருளினான்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لاَ تَعْلَمُونَ شَيْئا ً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالأَبْصَارَ وَالأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில் உங்களது தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்குச் செவிகளையும் கண்களையும் அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 16 : 78)
கண்சிமிட்டும் நேரம் அல்லாஹ் தன் அருளை  மறுத்துவிட்டால் மனிதன் அழிந்துவிடுவான்; ஒரு வினாடி அவன் தனது உதவியைத் தடை செய்துவிட்டால் மனிதனால் வாழ்முடியாது. அல்லாஹ்வின் அருளும் அவனது உதவியும் மகத்தானது.
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلاَةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لاَ نَسْأَلُكَ رِزْقا ً نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான். (அல்குர்ஆன்  20 : 132)
உன்னிடமிருந்து அல்லாஹ் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். அதனால் விளையும் நற்பலன்களும் உன்னையே வந்தடைகின்றன.
அவன் உன்னிடம் தன்னை மட்டுமே வணங்கவேண்டும்; எதையும் இணையாக்கக் கூடாது என்பதையே விரும்புகிறான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِ مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْق ٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. அன்றி எனக்கு ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும் அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் 51 : 56, 57, 58)
அல்லாஹ்தான் நமது ரப்பு, நாம் அவனுடைய அடிமைகள். அவன் யாவற்றையும் வளர்த்து காப்பவனாக இருக்கின்றான். அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அடியார்களாக நாம் இருக்கின்றோம்.
அல்லாஹ்வின் அருட்கொடைகள் நம்மீது இடைவிடாது பொழிந்துகொண்டிருக்க அவனுக்கு நன்றி செலுத்தாமல் அவனை நிராகரித்தால் அவனுக்கு மாறு செய்தால் அது எவ்வளவு பெரிய வெட்கங்கெட்ட செயலாகும்.
மனிதர்கள் எவரேனும்  உபகாரம் செய்திருந்தால் அவருக்கு மாறுசெய்யவும் அவரது விருப்பத்துக்கு முரணாகவும் நடப்பதற்கு நீ நிச்சயமாக வெட்கப்படுகிறோம். அவ்வாறிருக்க நாம் அடைந்திருக்கும் அனைத்து அருட்கொடைகளும் அவனது உபகாரம்தான்.  தீங்குகளிலிருந்து காப்பாற்றப்படுவது அது அல்லாஹ்வின் அருளினால்தான. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மாறு செய்வது எப்படி நியாயமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்.
وَمَا بِكُمْ مِنْ نِعْمَة ٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ
உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம் யாவும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். உங்களை யாதொரு தீங்கு அணுகும் பட்சத்தில் அவனிடமே முறையிடுகிறீர்கள். (அல்குர்ஆன்  16 : 53)
وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِه ِِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَج ٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيداً عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلاَةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلاَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ
(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்கவேண்டியவாறு முயற்சியுங்கள். அவனே உங்களைத் தெரிந்தேடுத்(து மேன்மையாக்கி வைத்)திருக்கிறான். இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. இது உங்கள் தந்தையாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும். அவர்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப்பெயரிட்டவர். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே உங்களுக்குப் பெயர் கூறப்பட்டுள்ளது. இதற்கு) நம்முடைய இத்தூதரே உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார். நீங்கள் மற்ற மனிதர்களுக்கு சாட்சியாக இருங்கள். தொழுகையைக் கடைபிடித்தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். அவன்தான் உங்களுடைய இரட்சகன். இரட்சகர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன். உதவி செய்கிறவர்களிலும் அவனே மிக்க நல்லவன். (அல்குர்ஆன்  22 : 78)
அடிப்படைக் கடமைகள்
1.அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும், நற்செயல்கள் செய்வதும் அல்லாஹ்வை நேசிப்பதும், அவனை கணியப்படுத்துவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது.
2.ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐந்துவேளை தொழுகையை நிலைநாட்டவேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான். இதயத்தையும் சூழ்நிலைகளையும் சீர்படுத்துகிறான். இந்த நல் அமலை அடியான் இயன்ற வகையில் நிறைவேற்றியே ஆகவேண்டும்.
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا خَيْرا ً لِأنْفُسِكُمْ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِه ِ فَأُوْلَائِكَ هُمُ الْمُفْلِحُون
உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் (அல்குர்ஆன் 64 : 16)
நபி (ஸல்) அவர்கள் இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி)  நோய் வாய்ப்பட்டிருந்தபோது கூறினார்கள் : நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக! அது உமக்கு இயலவில்லையென்றால் உட்கார்ந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுதுகொள்வீராக! நூல் : புகாரி.
3.ஜகாத்
அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும். அதை முஸ்லிம்களில் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் கடனில் மூழ்கியவருக்கும் வழிப்போக்கர்களுக்கும் ஜகாத்துக்குத் தகுதிபெற்ற இவர்களல்லாதவர்ககளுக்கும் வழங்கவேண்டும்.
4.வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றல்
எவரேனும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்… (அல்குர்ஆன்  2 : 185)
நிரந்தரமாக பலவீனமடைந்து நோன்பு நோற்கச் சக்தியற்றவர் ஒவ்வொரு நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்.
5.வசதி பெற்றவர் வாழ்வில் ஒருமுறை ஹஜ் செய்வது.
இந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்றவேண்டிய அடிப்படைக் கடமைகளாகும். இவையல்லாத அனைத்தும் சூழ்நிலைகளுக்கேற்ப விதியாகும் கடமைகளாகும். உதாரணம் : அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது, அல்லது காரணங்களால் ஏற்படும் கடமையாகும். உதாரணமாக அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது.
இக்கடமைகளை செய்வது மிக எளிதானது. இக்கடமைகளை  நிறைவேற்றினால் இம்மை மறுமையில் ஈடேற்றமடைந்து  நரகிலிருந்து விடுதலைபெற்று சுவனத்தினுள் நுழைவது நிச்சயம்.
كُلُّ نَفْس ٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்  3 : 185)

Sunday, May 1, 2011

வெற்றிக்கு வழிகாட்டும் தூய எண்ணம்


“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூற்கள்: புகாரி,முஸ்லிம்
    இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.
    “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
    “மறுமையில் தீர்ப்புக் கூறப்படும் அந்நாளில் ஒரு உயிர்த்தியாகி அல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார். அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான் செய்த அருட்கொடைகளை எடுத்துக் காட்டுவான். அவரும் அதை உணர்ந்து கொள்வார். அவரிடம் ‘எனக்காக என்ன செய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயே கொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார். அப்பொழுது இறைவன் ‘நீ பொய் சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய். அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்று கூறுவான். பிறகு (மலக்குகளை அழைத்து) அம்மனிதரை நரகில் முகம் குப்புற தள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
    மேற்கண்ட ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். படைத்த இறைவனுக்கு ஒரு மனிதன் செய்யக்கூடிய அதிகபட்ச தியாகமாக என்ன செய்ய முடியுமோ, அந்த தியாகத்தை, அதாவது உயிரை அல்லாஹ்வின் பாதையில் இழந்துள்ளார். இதை யாரும் மறுக்க முடியாது. அவ்வளவு எளிதாக யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தபோது எண்ணம் சரியில்லாத காரணத்தினால் அவர் நரகத்திற்கு செல்வதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நாம் உணர்ந்திருக்கிறோமா? என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
    இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய இறைவனுக்கு செய்ய வேண்டிய நல்ல அமல்களை பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் செய்யக்கூடிய பரிதாபகரமான சூழ்நிலைகளை பார்க்கிறோம். அவர்கள் இது குறித்து எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் மிக எளிதாக செயல்படுகிறார்கள். இவர்களைப் பற்றித் தான் படைத்த இறைவன் தன் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.
    எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)
    எனவே, நம்முடைய அமல்களை தூய எண்ணத்துடன் செய்ய செய்யவேண்டும். மற்றவர்கள் பார்ப்பதற்காக, புகழ்வதற்காக என்று செயல்பட்டால் மறுமையில் நாம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டும். வல்ல இறைவன் நம் அனைவரையும் தூய்மையான எண்ணங்களுடன் வாழ கிருபை செய்வானாக! ஆமீன்.

தொழாதவன் முஸ்லிம் அல்ல

Post image for தொழாதவன் முஸ்லிம் அல்ல

தொழுகையை வேண்டுமென்றே யாராவது புறக்கணித்தால் அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறியவனாகக் கருதப்படுவான்.
ஓர் அடியானுக்கும் நிராகரிப்பிற்கும் இடையில் பிரித்துக் காட்டுவது தொழுகையை விடுவதாகும் என நபி صلى الله عليه وسلم   அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்:முஸ்லிம்
நமக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் இடையில் பிரித்து காட்டுவது தொழுகைதான். எனவே எவன் தொழுகையை விட்டு விடுகிறானோ, அவன் காபிராகி விட்டான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்:திர்மிதீ, நஸயீ
தொழுகையைத் தவிர வேறு எந்த செயலையும் விடுவது இறை நிராகரிப்பாகும் என நபித்தோழர்களில் யாரும் கருதவில்லை என அப்துல்லாஹ் பின் ஷகீக் அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதீ
தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்.
 சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 74:40-43)

இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)
தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates